TRB

Sunday, 4 September 2016

என்று தணியும் இந்த கல்வி தாகம்?

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ - தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்து அருளிய 400-வது குறள் இது. ‘மாந்தருக்கு அழிவற்ற செல்வமாக விளங்குவது கல்வியே; கல்வியை தவிர வேறு சிறந்த செல்வம் எதுவும் உலகில் இல்லை’ என்பதே இதன் பொருள். மக்களை, மாக்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு உதவும் இந்த மூன்றெழுத்து மந்திரம்தான், நாகரிகம் பெற்ற மனிதனின் அடிப்படை தேவைகளில் இன்று முன்னணியில் இருக்கிறது.
அதுவே இந்தியாவில், அடிப்படை உரிமையும் ஆகியிருக்கிறது. மூன்று வயது முதல் மூச்சு இருக்கும் வரை இந்த கல்விக்கடலில் மூழ்கி முத்தெடுக்க நினைப்பவர் ஏராளம், ஏராளம். அத்தகைய வாஞ்சையுள்ளோருக்கு அறிவு செல்வத்தை வாரி கொடுப்பதில் எத்தகைய வஞ்சனையும் காட்டுவதில்லை இந்த கல்வியும். குடிமக்களுக்கு எவ்வாறு சுத்தமான உணவும், நீரும், காற்றும் கொடுப்பது அரசுகளின் கடமையோ, அதைப்போலவே கரையிலா கல்வியை கறையில்லாமல் கொடுக்க வேண்டியதும் ஆளும் வர்க்கத்தினரின் தலையாய கடனே. ஆனால் கல்வித்தரத்தில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் நாம் பின்தங்கியே இருக்கிறோம். இது அடிக்கடி நிரூபணமாகி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடி தருகிறது. இதில் சமீபத்திய உதாரணமாக பீகார் மாநிலத்தில் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்த மாணவி ஒருவரிடம், ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ (அரசியல் அறிவியல்) என்றால் என்ன? என்று கேட்ட போது, சமையல் கலை குறித்த படிப்பு அது என அப்பாவியாக கூறியிருக்கிறார், அந்த மாணவி. பொதுத்தேர்வில் மோசடி செய்து தான் அந்த மாணவி முதலிடம் பிடித்தார் என்பது பின்னர் தெரியவந்து, அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்றால் என்ன? என்று தெரியாதது நமது கல்வித்திட்டத்தின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதைப்போல கடந்த 2012-ம் ஆண்டில் உலகளாவிய மாணவர்கள் கலந்து கொண்ட ‘பிஸா’ என்று அழைக்கப்படும் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 73 நாடுகளில் இந்தியா 72-வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. உள்நாட்டில் நடத்தப்படும் பல்வேறு பொதுத்தேர்வுகளில் கூட நகர்ப்புற மாணவர்களுடன், கிராமப்புற மாணவர்கள் போட்டிபோட முடிவதில்லை. இதனாலேயே பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இதுதான் இந்தியாவின் கல்வித்தரம். மிக அதிக மனிதவளத்தை கொண்டிருக்கும் இங்கு கல்விக்காகச் செலவிடப்படும் தொகை மிகக் குறைவு. இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்து பெருமிதத்துடன் வெளியேறும் மாணவர்கள் தகுதி குறைவோடுதான் வருகிறார்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். என உயர்கல்வி நிறுவனங்கள் பல இருந்தாலும் அவற்றின் மாணவர்களால் உலக மாணவர்களுடன் போட்டிப் போட முடியவில்லை என்பதுதான் நிஜம். திறன் மேம்பாட்டில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். இந்த குறைபாட்டை களைவதற்கு தகுதி வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களுடன், தரமான கல்விக்கொள்கையும் தேவை. இதையே பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை உணர்ந்த மத்திய பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே புதிய கல்விக்கொள்கையை வகுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்காக மக்களிடம் இருந்து கருத்துகளை கேட்டறிந்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றையும் அமைத்தது. மத்திய மந்திரிசபை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மங்கட், தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) முன்னாள் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன் புதிய கல்வி கொள்கையை உருவாக்க மத்திய மனிதவள அமைச்சகம் சில விவாத தலைப்புகளையும் வெளியிட்டது. இது குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வந்தன. அவற்றில் இருந்து திரட்டப்பட்ட முக்கியமான கருத்துகளை எல்லாம் தொகுத்து டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு மத்திய அரசிடம் அறிக்கையாக கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி அமைக்கப்பட்ட இந்த குழு மிகவும் குறுகிய காலத்திலேயே அதாவது கடந்த ஏப்ரல் 30-ந்தேதியே தனது 230 பக்க பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. வரைவு கொள்கையாக கருதப்படும் இந்த அறிக்கையின் முக்கியமான அம்சங்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த வரைவு கொள்கையில் செய்ய வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகள் ஏதும் இருந்தால் அது குறித்து தெரிவிக்க 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ‘அறிவு, தகுதி, வேலைவாய்ப்பு’ போன்றவற்றை உறுதி செய்யும் நோக்கில் ‘கற்பித்தல், ஊக்குவித்தல், தெளிவுபடுத்துதல்’ என்ற கோஷங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவு கொள்கை சில உறுதியான முடிவுகளுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது. குறிப்பாக துணை வேந்தர் நியமனங்களில் அரசியல் இருக்கக்கூடாது... பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சியும், கல்வி சுதந்திரமும் வழங்க வேண்டும்... பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) போன்ற அமைப்புகளை ரத்து செய்வது... கல்விக்கு 6 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியை பயன்படுத்துதல்.... போன்ற பரிந்துரைகளை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். இதை செயல்படுத்துவதில் உறுதியை காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் புதிய கல்விக்கொள்கை மறைமுக காவிமயம், தனியார்மயம் போன்றவற்றுக்கு வழிவகுப்பதாக கூறி அதற்கு எதிராக அவர்கள் போர்க்கொடியும் தூக்கியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அடுக்கும் காரணிகளில் ஒரு சில... டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவில் இடம் பெற்றிருந்த இயற்பியல் பேராசிரியரான ஜே.எஸ்.ராஜ்புத்தை தவிர மற்ற யாருக்கும் கல்வித்துறையில் பணியாற்றிய அனுபவம் இல்லை. நிர்வாக துறைகளிலேயே பணியாற்றி உள்ளனர். ஜே.எஸ்.ராஜ்புத் கூட பெரும்பாலான ஆண்டுகளை கல்வித்துறையின் நிர்வாக பணிகளிலேயே செலவிட்டுள்ளார். எனவே இந்த குழுவினர் கல்வி சீர்திருத்தத்தை விட நிர்வாக சீர்திருத்தத்திலேயே கவனம் செலுத்தியுள்ளனர். மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றும் வகையிலும், அரசு பள்ளிகள் மூடுவிழா காண்பதை தடுக்கும் விதமாகவும் எந்த பரிந்துரையும் இந்த அறிக்கையில் கூறப்படவில்லை. இதனால் கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிக்கவே செய்யும். உயர்கல்வியை பொறுத்தவரையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் நுழைவுத்தேர்வை இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இது தற்காலிக நடவடிக்கையாக உள்ளதே தவிர, இதில் நிழல் கல்வித்துறை ஈடுபாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான பரிந்துரைகள் எதுவும் இல்லை. முந்தைய கல்வி கொள்கைகளை போலவே இந்த குழுவினரும், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கவில்லை. உயர்கல்வி துறையில் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் பற்றாக்குறை என்பதை இந்த குழுவினர் நினைவு கூர்ந்துள்ளனர். ஆனால் இதற்கு போதுமான நிதியை ஒதுக்க அரசிடம் பரிந்துரைக்க தவறிவிட்டனர். கல்வித்துறைக்கு என பொதுவாக நிதி ஒதுக்க கேட்டிருக்கிறதே தவிர, ஆய்வுத்துறைக்கு என தனியாக எதையும் கோரவில்லை. ஆய்வு படிப்புகளுக்காக வெறுமனே 100 சிறப்பு மையங்கள் நிறுவ வேண்டும் என கூறியிருப்பது மேலோட்டமான தலையீடு மட்டுமே. இதற்கு ஆரம்பகால செலவின தொகையாக பரிந்துரைக்கப்பட்டு உள்ள ரூ.1000 கோடிகூட மிகச்சிறு தொகையே. உயர்கல்வியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் வெறும் 200 பல்கலைக்கழகங்களோடு நிறுத்தப்பட்டு உள்ளதுடன், அந்த பல்கலைக்கழகங்கள் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், தங்கள் தரத்துடன் இணையான பல்கலைக்கழகங்களுடனே கூட்டு வைக்க விரும்பும். அப்படியிருக்க நடுத்தர தரம் கொண்ட இந்திய பல்கலைக்கழகங்களுடன் அவை எவ்வாறு இணைந்து செயல்படும்? இதைப்போல மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, அவற்றை முற்றிலும் அதிகாரமற்றதாக செய்யும் பரிந்துரைகள், முதல் தலைமுறை மாணவர்களை உயர் கல்விக்கு செல்லவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி, உயர் கல்வியை தங்கு தடையின்றி சந்தையிடம் ஒப்படைக்கும் வழிமுறைகள், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் பரிந்துரைகளும் புதிய கல்விக்கொள்கையில் உள்ளதாக கல்வியாளர்கள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளனர். பேராபத்துக்களை உள்ளடக்கிய இந்த பரிந்துரைகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பினர் என பலரிடமும் கருத்துகள் பெற்ற பின்னரே கல்வி கொள்கை தயார் செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் கல்வியின் தரம் ஏனோ சொல்லிக்கொள்ளும்படி இன்னும் அமையவில்லை. என்னதான் சந்திரயான், மங்கள்யான் மூலம் நாம் கோள்களை எட்டிப்பிடித்தாலும், அடிப்படை கல்வியின் தரத்தில் இன்னும் அடுத்தவரை ஏக்கத்துடன் பார்க்கும் நிலைமையிலேயே இருக்கிறோம். 2020-ல் வல்லரசாகும் கனவுடன் நடைபோட்டு வரும் நாம், அதற்கு அடிப்படையான கல்வியின் தரத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு ஒருசார்பாக திட்டங்களை வகுக்காமல் அனைத்து பிரிவினரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கொள்கைகளை வகுத்தல் வேண்டும். சிறந்த மனித வளத்துடன், தரமிக்க கல்வியும் இணைந்தால் வல்லரசு உலகில் நுழைவதற்கான நமது வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகுமே!

சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகள்
* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் ‘இந்திய கல்விப்பணி (ஐ.இ.எஸ்)’ பணிநிலை உருவாக்குதல்.
* சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தும் யு.பி.எஸ்.சி-யே இந்த ஐ.இ.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யும் தேர்வுகளையும் நடத்துதல்.
* மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவ்வப்போது கொள்கை ஆலோசனைகளை வழங்குவதற்கு கல்வி நிலைக்குழு அமைத்தல்.
* கல்வி சேவைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்வு காணும் பொருட்டு மாநிலங்களில் கல்வி தீர்ப்பாயங்களை உருவாக்குதல்.
* பொது நுழைவுத்தேர்வு (கேட்) தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்த நிர்வாக தீர்ப்பாயங்களை மத்தியிலும், மண்டலங்களிலும் ஏற்படுத்துதல்.
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 6 சதவீதத்தையாவது கல்வித்துறைக்கு செலவிட தாமதமின்றி நடவடிக்கை எடுத்தல்.
உயர்கல்வித்துறை:-
* அனைத்து கல்வி நிறுவனங்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் வரும் பிற அரசு அமைப்புகள் அனைத்தையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
* உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆணையங்கள் தொடர்பான தனித்தனி சட்டங்களுக்கு பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி மற்றும் நிர்வாக சட்டம் இயற்ற வேண்டும்.
* இந்த சட்டத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற, சட்டப்பூர்வ உயர்கல்விக்குழு ஒன்றை ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களால் அமைக்க வேண்டும்.
* ஒழுங்குபடுத்துதல் நெறிமுறைகளை சீரமைக்க வேண்டும்.
* யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. போன்ற அமைப்புகளை ரத்து செய்து விட்டு, ஒரே ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.
* பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாணவர்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேருக்காவது ஆண்டுதோறும் உதவும் வகையில் தேசிய கூட்டுறவு நிதி ஒன்றை உருவாக்க வேண்டும்.
* 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் தேசிய திறன் ஊக்கத்தொகை திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
* என்ஜினீயரிங் மற்றும் பிற தொழில்முறை கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.
* மருத்துவ கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதுடன், தற்போதைய கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும்.
* தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த செயல்திறன் மிக்க புதிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
* பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் அரசியல் கூடாது.
* பல்கலைக்கழக வளாகங்களில் இயங்கும் அரசியல் கட்சிகள் சார்ந்த மாணவர் அமைப்புகள், சாதி, இனம் மற்றும் மதம் சார்ந்த மாணவர் அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
* பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்கள் தங்கும் காலத்துக்கு ஒரு எல்லையை நிர்ணயிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை:-
* பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, நியமனம் மற்றும் இடமாறுதல் வழிமுறைகளை முற்றிலும் புதுப்பிக்க வேண்டும்.
* தேர்தல் பணிகள் போன்ற கற்பித்தல் அல்லாத பிற பணிகளில் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும்.
* கல்வி ஆலோசனை அமைப்பு மற்றும் திறனாய்வு தேர்வு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
* கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீர்படுத்தும் கற்பித்தல் முறையை உருவாக்க வேண்டும்.
* சிறப்பு குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிட மாநிலங்களின் கீழ் சுதந்திரமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
* வளர்ந்து வரும் தேசிய தேவைகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
* 10-ம் வகுப்பு அரசு தேர்வுகளை மறுசீரமைக்க வேண்டும்.
* 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தரம் மற்றும் மதிப்பெண்கள் வழங்குவதற்கு பதிலாக அளவிடப்பட்ட மதிப்புகள் மற்றும் சதவீத முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
* அரசு தேர்வுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
* சமஸ்கிருதத்தை 5-ம் வகுப்பு வரை விருப்ப பாடமாக கொண்டு வர வேண்டும்.
* பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகாவை சேர்க்க ஊக்கப்படுத்த வேண்டும்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பிற கல்வித்துறை ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையும், தகுதி அடிப்படையும் பின்பற்ற வேண்டும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உரிமம் அல்லது சான்றிதழ் முறையை கட்டாயமாக்க வேண்டும்.
* தேர்வுகளை தாண்டியும் மாணவர்களின் செயல்பாடுகளை அடிக்கடி மதிப்பிடுவதற்கான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
* 4 மற்றும் 5 வயது மாணவர்களின் பாலர் கல்வி முறையை உரிமையாக அறிவிக்க வேண்டும்.
* 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் அவர்கள் தேர்ச்சி பெறுவதை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். எனினும் அவர்களுக்கு தங்கள் தேர்வை முடிக்க 2 வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
* உயர்நிலை வகுப்பு வரை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஆராய்ச்சி படிப்புகள்:-
* அரசு மற்றும் தனியார் துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் உயர்கல்விக்கான 100 சிறப்பு மையங்களை திறக்க வேண்டும்.
* இந்த மையங்களை நிறுவுவதற்கான கொள்கைகளை வகுப்பதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
* இந்த மையங்களுக்காக ரூ.1000 கோடி ஆரம்ப கால நிதியுடன் தேசிய நிதி ஒன்றையும் உருவாக்க வேண்டும்.
* உலக அளவில் முதல் 200 இடங்களில் இருக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.