TRB

Thursday, 10 November 2016

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அரசாணை 71-ல் 'வெயிட்டேஜ்' முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்கவேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்குகள் தொடுத்தனர். ஐகோர்ட்டு தீர்ப்பு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொட ரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டு விசாரணை இதைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்துகொண்ட லாவண்யா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், மூத்த வக்கீல் அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ், தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கின் மீதான இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது:- தமிழக அரசாணை செல்லும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பங்கேற்கும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மதிப்பெண் தொடர்பான விலக்கு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதலை கருத்தில் கொள்ளவில்லை. எனவே சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும். தேர்வில் வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.