TRB

Wednesday, 19 July 2017

BSMS ADMISSION 2017 | சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இல்லை என்பதால் கடும் போட்டி இருக்கும் | சித்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் இல்லை என்பதால் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த பிரச்சினையால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிவடையும் போது சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சித்தா போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சித்தா போன்ற மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி ஆகிய மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என 1500-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அனுமதி கிடைக்காத தனியார் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அதிகரிக்கும். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒரு மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்படும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு தான் இந்திய மருத்துவ கவுன்சில் எத்தனை இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது தெரியவரும். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தினால் பல மாணவர்களால் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இந்த படிப்புகளில் சேர கடும் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.