Tuesday, 19 June 2018

பழைய நடைமுறைப்படி ‘சிடெட்’ தேர்வு; மீண்டும் மொழித்தாள் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி மொழித்தாள் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு பழைய நடைமுறைப்படி சிடெட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. மொத்த மதிப்பெண் 150 தாள்-1-தேர்வில் மொழித்தாள்-1, ஆங்கிலம் (மொழித்தாள்-2), கல்வி உளவியல், கணிதம், சுற்றுச்சூழலியல் ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 150. தாள்-2 தேர்வில், மொழித்தாள்-1, ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள், கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு) பகுதியில் இருந்து 60 கேள்விகள் (சமூக அறிவியல் ஆசிரியர்கள் எனில் சமூக அறிவியல் பாடத்தில் 60 கேள்விகள்) என 150 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. சிடெட் தேர்வுகளில் மொழித்தாள்-1 பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உட்பட 17 இந்திய மொழிகளின் பட்டியலில் இருந்து தேர்வர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு மொழிப்பாடத்தை தேர்வுசெய்ய வேண்டும். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மொழித்தாள் பகுதியில் தமிழ் மொழியை தேர்வுசெய்வது வழக்கம். தகுதிபெற 60 % மதிப்பெண் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டிருக்கும். (தமிழ் பகுதிக்கான வினாக்கள் தமிழில்தான் இருக்கும்). மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் சிடெட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90) பெற்றவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தகுதி பெற 55 சதவீத மதிப்பெண் (82) எடுத்தால் போதும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சிடெட் தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதில், மொழித்தாள்-1 தேர்வில் இதுவரை இடம்பெற்று வந்த 17 மொழிகள் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு அவற்றில் ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் நாளிதழ்களில் வெளியானது. தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளின் பட்டியலை மொழித்தாள்-01 தேர்வுக்கான பட்டியலில் இருந்து நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார் கள் என்றும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி நடப்பதாகவும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர். பாமக எச்சரிக்கை மொழித்தாள்-1 பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சிடெட் சர்ச்சை குறித்து டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறும்போது, “மொழித்தாள்-1 தேர்வு பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த 17 மொழிகள் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட) மீண்டும் சேர்க்கப்பட்டு சிடெட் தேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக சிபிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார். செப்டம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ள சிடெட் தேர்வுக்கு ஜூன் 22 முதல் ஜூலை 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


No comments: