Saturday, 16 June 2018

கணக்கு தணிக்கையாளர் படிப்பில் சேர பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்தின் தென்மண்டல கவுன்சில் சார்பில், தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசியதாவது: ஆண்டுதோறும் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக வெளியில் வருகின்றனர். தமிழகத்தில் 80 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு கணக்கு தணிக்கையாளர் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராவதற்கும் ஏற்ற வகையில் 75 மையங்களில் 25 நாட்கள் கொண்ட பயிற்சி அளிக்க இருக்கிறோம். அதற்காக இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணக்கு தணிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவர்களின அதிகாரங்களை உயர்த்த அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது: அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் ஆங்கிலம் கற்பிக்கவும், மாணவர்கள் ஆங்கிலம் கற்கவும், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆங்கிலத் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் நடமாடும் நூலகங்கள் அறிமுகப்படுத்தப்படும். 4 வாரங்கள் நடைபெற்ற நீட் பயிற்சி மூலம், இந்த ஆண்டு நீட் தேர்வில் 1412 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 150 பேர் எம்பிபிஎஸ் படிப்பில் சேரமுடியும். இந்த முறை ஜூலை மாதமே 412 மையங்களில் நீட் பயிற்சியைத் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவன முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி, தென்மண்டல கவுன்சில் தலைவர் அடுசுமில்லி வெங்கடேச ராவ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments: