TRB

Thursday, 2 May 2019

கால்நடை மருத்துவ படிப்புக்கு 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கு 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. கால்நடை மருத்துவ படிப்பு 2019-20-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி.-ஏ.எச்.), உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) 8-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 80 இடங்கள் என மொத்தம் 360 இடங்கள் இருக்கின்றன. அதேபோல், சென்னை கோடுவளி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் 40 உணவு தொழில்நுட்ப பட்டப்பிடிப்பு இடங்களும், 20 பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 40 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. விண்ணப்பம் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு இடங்களில் 15 சதவீதம் இந்திய கால்நடை மருத்துவ குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல், உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களில் 15 சதவீதம் இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது. தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் 8-ந்தேதி காலை 10 மணி முதல் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், தகுந்த சான்றிதழ் நகல்களுடன் ஒவ்வொரு பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக ‘தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600051’ என்ற முகவரிக்கு ஜூன் 10-ந்தேதி மாலை 5.45 மணிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கலந்தாய்வு தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 24-ந்தேதி வெளியிடப்படும். அயல்நாடுவாழ் இந்தியர், அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 1-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு கலந்தாய்வும், உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) சிறப்பு பிரிவு கலந்தாய்வும் ஜூலை 9-ந்தேதி நடக்கிறது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு கலையியற் பிரிவு கலந்தாய்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறுகிறது. உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) கலந்தாய்வு ஜூலை 11-ந்தேதி நடைபெறும். இத்தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.